ரூ.1000 பொங்கல் பரிசு : 'டோக்கன்' தொடர்பாக புதிய தகவல்..

gift3

பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடும் வகையில் அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப்பணமும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி பொங்கல் தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தவுடன் அனைத்து பகுதியிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பொங்கல் தொகுப்பு பெறும் வகையில் வீடு வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் வழங்கி வருகின்றனர். எந்த நாளில் எந்த நேரத்தில் கடைக்கு வந்து ரொக்கப்பணம் பெற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. தினமும் 200 முதல் 300 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக டோக்கன்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகிக்கும் போது கதவு பூட்டப்பட்டு இருந்தாலோ, வெளியூர் சென்று இருந்தாலோ வழங்க முடியாமல் போகிறது. இதுபோன்ற காரணத்தால் டோக்கன் கிடைக்காதவர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படத்தேவையில்லை. அனைவருக்கும் பொங்கல் தொகுப்பிற்கான பணம், பொருட்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒருவேளை டோக்கன் பெற முடியாத நிலையில் இருந்தவர்களுக்கும் விடுபட்டு போனவர்களுக்கும் தனியாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அவர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் பெறக்கூடிய குடும்ப அட்டை உறுப்பினர்கள், கைரேகை பதிவு செய்து பெற வேண்டும்.

ரேஷன் கடைக்கு வர இயலாத நிலையில் உள்ளவர்கள் அவர்களின் அத்தாட்சி கடிதம் பெற்று வந்து ஒருவர் தொகுப்பை பெறலாம் என்று சிவில் சப்ளை அதிகாரிகள் தெரிவித்தனர். 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் ரேஷன் கடைகள் இயங்காது.

வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையில் 5 நாட்களுக்குள் பெற இயலாமல் உள்ளவர்களுக்கு மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்படுமா என்பது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story