சென்னையில் உச்சநீதி மன்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

mks3

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ரூ.315 கோடியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் உயர்நீதிமன்ற பயன்பாட்டுக்காக பழைய சட்டக் கல்லூரி கட்டிடத்தை புதுப்பிப்பதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.315 கோடிக்கான புதிய உயர்நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கவும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நீதிமன்றத்துக்கே அடையாளமாக சுட்டிக்காட்டி சொல்லக்கூடிய அளவுக்கு அடையாள தோற்றத்தோடு உயர்நீதிமன்ற கட்டிடம் இருந்து வருகிறது. இதே அழகும், கலை நயமும், கம்பீரமும் கொண்ட புதிய கட்டிடம் அமைய வேண்டும் என்று நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

கம்பீரமான சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்துடன் இதற்கு முன்பு இருந்த சென்னை சட்டக்கல்லூரி வளாகமும் இணைக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற கட்டிடத்தை போலவே சட்டக் கல்லூரி கட்டிடமும் கம்பீரமானதுதான்.

1891-ம் ஆண்டு சென்னையில் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. 'மெட்ராஸ்' சட்டக்கல்லூரி என்று அப்போது பெயர். இந்தியாவுக்கான சட்டத்தை உருவாக்கி கொடுத்த அண்ணல் அம்பேத்கர் நினைவாக அவரது பெயர் சூட்டியவர் கலைஞர்தான். அந்த வளாகத்தையும் பழமை மாறாமல் மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாரம்பரியமான கட்டிடங்களை பாதுகாப்பது என்பது நமது வரலாற்றை பாதுகாப்பது. அதில் நமது அரசு மிக கவனமாக இருக்கிறது. பாரம்பரிய கட்டிடங்கள் மிக அதிகம் உள்ள நகரமாக சென்னை அமைந்துள்ளது.

பல நூறு ஆண்டு பழமை கொண்ட சென்னை கோட்டையும் அதனை சுற்றி உள்ள பகுதிகள். சென்ட்ரல் ரெயில் நிலையம், தேவாலயங்கள், எழும்பூர் ரெயில் நிலையம், தர்காக்கள், அரசு அருங்காட்சியகம், அமீர் மகால், டி.ஜி.பி. அலுவலகம், காவல் துறை அருங்காட்சியகம், அரசு கவின் கலைக்கல்லூரி, ஆவண காப்பகம், ரிப்பன் கட்டிடம், தெற்கு ரெயில்வே தலைமையகம் இப்படி எத்தனையோ கட்டிடங்கள் சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களாக அமைந்திருக்கிறது.

இவை பழமையான நமது பண்பாட்டு சின்னங்கள். இவற்றின் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் பழைய சென்னை சட்டக்கல்லூரி வளாகமும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டற கலந்து விட்டவை. அதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியத்தில் கொட்டி கிடக்கிறது.

வள்ளுவரும், இளங்கோ அடிகளும் புறநானூற்று புலவர்கள் பலரும், நீதியின் மேன்மையை பற்றி செங்கோல் வழுவா சிறப்பு பற்றியும், எப்போதும் உயர்த்தி பிடித்துள்ளார்கள். அத்தகைய திராவிட மரபு வழி வந்த பண்பாட்டில் வளர்ந்த நாம் அதே உயர்ந்த இடத்தில் நீதித்துறையை வைத்து அதற்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். சென்னையில் ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

அவை அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து செயல்பட வைக்க வேண்டும். அதுதான் சிறப்பானதாக இருக்கும். நீதித்துறையினர் நினைத்து அரசுக்கு பரிந்துரை செய்ததும் உடனே நாங்கள் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கினோம். இதன் மூலமாக சென்னையில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் இருந்து செயல்பட போகின்றன.

இது பொதுமக்களுக்கு ஏற்பட்ட வசதி மட்டுமல்ல. வழக்கறிஞர்களுக்கும் இது மிகப்பெரிய வசதிதான். நீதித்துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 23 அன்று சென்னை உயர்நீதிமன்ற விழாவில் நான் பங்கேற்றேன்.

நீதித்துறையின் உட்கட்டமைப்பு தேவைகளுக்காக பல்வேறு நீதிமன்றங்களுக்கு 4.24 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கி ஆணையிட்டது. 9 அடுக்கு கட்டிடம் கட்ட ரூ.315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்று 2021 மே மாதம் முதல் 3 கூடுதல் நீதிமன்றங்கள் உள்பட 35 புதிய நீதிமன்றங்கள் ரூ.54 கோடியே 84 லட்சம் செலவில் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

கோவை, காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், பட்டியலினத்தவருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. புதிதாக நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுதல், குடியிருப்பு கட்டிடம் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டிடங்களை பராமரித்தல் ஆகிய பணிகளுக்காக தமிழக அரசு 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.268 கோடி ஒப்பளிப்பு தந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் மற்றும் கிளை நீதிமன்றங்களுக்கு கணினி தொடர்பான கட்டமைப்பு உருவாக்குவதற்கு கம்ப்யூட்டர் போன்றவை வாங்க மொத்தம் ரூ.11 கோடியே 63 லட்சம் ஒப்பளிப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்துக்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும் என நான் உறுதி அளிக்கிறேன்.

நான் சில கோரிக்கைகளை தமிழ்நாட்டின் சார்பாக இங்கே வருகை புரிந்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கனிவான கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன். 1. தென்னிந்திய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் உச்சநீதிமன்றத்துக்கான ஒரு கிளை நீதிமன்றம் சென்னையிலே அமைக்க வேண்டும். 2. நீதி கேட்டு வந்திருக்கும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வைக்க வேண்டும்.

3. நீதிபதி நியமனங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் இருக்க கூடிய வகையில் நியமனம் அமைய வேண்டும். இவற்றை இங்கு வந்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் கனிவுடன் இதை பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன்.

எனது தலைமையிலான அரசு சட்டத்தின் அரசாக நீதியின் அரசாக, சமூக நீதி அரசாக, செயல்படுவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Share this story