வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் : நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆதாரங்களை சமர்ப்பிப்பு..

nayan3

நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர்.

திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.

இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 3 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story