செல்போனில், தாயிடம் ரூ.50,000 கேட்டு கடத்தல் நாடகமாடிய மகள்; ஏன் தெரியுமா?

By 
kitnap2

வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் நேற்று இரவு தனது தாயின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, என்னை மர்ம நபர்கள் கடத்தி வைத்து உள்ளனர். ரூ.50 ஆயிரம் பணத்தை நேரடியாக கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே விடுவிப்பார்கள். எனது செல்போனையும் பிடுங்கி வைத்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாய், கடத்தல் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இளம்பெண் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச்சு கொடுத்தனர். இதில் பேசிய நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் கடத்தல் நபர்கள் பூந்தமல்லி அருகே இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே மலையம்பாக்கம் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே ஒரு இடத்தில் நின்ற இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, கோயம்பேட்டில் நின்ற போது ஆட்டோவில் வந்த ஒரு வாலிபரும், இரண்டு பெண்களும் சேர்ந்து தன்னை கடத்தி வந்ததாகவும் பின்னர் பணம் கேட்டு மிரட்டி விட்டு தன்னை இங்கு இறக்கி விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அவர் கூறிய இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் இளம்பெண் நிற்பது பதிவாகி இருந்தது. அதில், இளம்பெண்ணுடன் இரண்டு தோழிகள், ஒரு ஆண் நபர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி டீக்கடையில் அமர்ந்து ஜாலியாக டீ குடித்து விட்டு செல்வதும் பின்னர் அந்த இளம்பெண் தனது தோழியின் செல்போனை வாங்கிவிட்டு தனியாக சென்று பேசுவதும் பதிவாகி இருந்தது.

இதனை காட்டி இளம்பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் கடத்தல் நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். ஆண் நண்பரிடம் ஜாலியாக ஊர்சுற்றி செலவு செய்ய தாயிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்று நாடகமாடியதாக இளம் பெண் போலீசில் தெரிவித்தார்.

இதையடுத்து இளம் பெண், அவரது தோழிகள், ஆண் நண்பரையும் போலீசார் எச்சரித்தனர். மேலும் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி தாயுடன் அனுப்பி வைத்தனர்.

Share this story