காதலியை கொன்று, 35 துண்டுகளாக கூறுபோட்ட பயங்கரம்; வாலிபர் வெறிச்செயல்..

sratha

மும்பையில் உள்ள ஒரு சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வந்தவர் ஷிரத்தா. இவருடன் அதே நிறுவனத்தில் அப்தாப் அமின் என்பவரும் பணிபுரிந்து வந்தார். இருவரும் ஒரே பிரிவில் பணிபுரிந்து வந்ததால் நண்பர்களாக பழகினார்கள்.

ஒரு கட்டத்தில் அவர்கள் காதலர்களாக மாறினார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் ஷிரத்தாவின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் மும்பையில் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதற்கு ஷிரத்தா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர்.

இதையடுத்து அப்தாப் அமினும், ஷிரத்தாவும் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர். டெல்லியில் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இருவரும் மெக்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். திருமணம் செய்துகொள்ளாமல் அவர்கள் வசித்து வந்ததால் இரு குடும்பத்திலும் தொடர்ந்து எதிர்ப்பு காணப்பட்டது.

இந்த நிலையில் அப்தாப் அமினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஷிரத்தா வலியுறுத்தினார். ஆனால் அதை அப்தாப் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படத் தொடங்கியது. ஷிரத்தா நாளுக்கு நாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்த தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்தாப் அமின், ஷிரத்தாவை அடித்து துன்புறுத்தினார்.

கடந்த மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. அப்போது அப்தாப் ஆத்திரத்தில் ஷிரத்தா கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை. சமையல் செய்ய பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து ஷிரத்தா உடலை துண்டுதுண்டாக வெட்டினார்.

மனதில் ஈவுஇரக்கமின்றி ஷிரத்தா உடலை 35 துண்டுகளாக அவர் வெட்டி பிரித்தார். அந்த உடல் பாகங்களை ஒரே சமயத்தில் வெளியே எடுத்துச்சென்றால் சிக்கிக் கொள்வோம் என்ற பயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதிதாக பிரிட்ஜ் ஒன்றை வாங்கி வந்தார்.

ஷிரத்தாவின் 35 உடல் பாகங்களையும் தனித்தனி பார்சல்களாக கட்டி அந்த பிரிட் ஜுக்குள் வைத்தார். கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வெளியே வீசத்தொடங்கினார். தினமும் நள்ளிரவு 2 மணிக்கு ஷிரத்தா உடல் பாகத்தில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு பகுதியில் வீசிவிட்டு வருவார்.

இப்படி 18 நாட்கள் ஷிரத்தா உடல் பாகங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று டெல்லி முழுக்க வீசியுள்ளார். இதற்கிடையே ஷிரத்தாவுடன் அவரது குடும்பத்தினர் போனில் பேச முடியாததால் தவிப்புக்குள்ளானார்கள்.

அவரது தந்தை விகாஷ் மதன் கடந்த வாரம் டெல்லியில் ஷிரத்தா குடியிருந்த வீட்டுக்கு சென்றார். வீடு பூட்டி இருந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்தாப் அமினை பிடித்து விசாரித்தனர்.

அப்போதுதான் அவன் ஷிரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசி விட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவனை கைது செய்தனர். ஷிரத்தா உடல் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

Share this story