டீக்கடையில் வேலை பார்த்த மாணவி, எம்பிபிஎஸ் டாக்டர் ஆகிறார்; இதோ பாடம்..

By 
mbbs

கேரள மாநிலம், கொச்சி பகுதியை சேர்ந்தவர் ஜாசன். வேன் டிரைவர்.

இவரது மனைவி பிந்து. இவர்களுக்கு 3 குழந்தைகள். ஜாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவருக்கு வேன் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, குடும்பத்தைக் காப்பாற்ற அந்த பகுதியில் உள்ள தெருவில் சிறிய டீக்கடை தொடங்கினார். அந்த கடையில், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளும் வேலை பார்த்தனர்.

வீதிக்கடையே வீடு :

ஜாசனுக்கு வீடு இல்லாததால், வீதியில் உள்ள டீக்கடையிலேயே இரவில் குடும்பத்துடன் தங்கினர். 

இவர்களின் மூத்த மகள் எட்னா. இவருக்கு சிறுவயதில் இருந்தே டாக்டர் ஆகவேண்டும் என்று விருப்பம்.

தனது விருப்பத்தை நிறைவேற்ற தந்தையின் வருமானம் போதாது என்பதால் எட்னா, அவரே சுயமாக படித்து மெரிட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க முடிவு செய்தார்.

அதன்படி, தந்தையின் டீக்கடையில் வேலை பார்த்துக்கொண்டே படித்து வந்தார். 

நுழைவுத்தேர்வு :

பிளஸ் 2 முடித்த பின்பு, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற கடினமாக முயற்சி செய்தார்.

எட்னாவின் முயற்சி வீண் போகவில்லை. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற எட்னாவுக்கு, ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள மக்கள் எட்னாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதோடு, எட்னாவின் கல்விச் செலவு மற்றும் விடுதிக் கட்டணத்தை செலுத்த, அப்பகுதி மக்களே வாட்ஸ் அப் குழு மூலம் பணம் திரட்டிக் கொடுத்தனர். 

இந்த பணம், எட்னாவின் படிப்புக்கு ஆகும் செலவைக் காட்டிலும் அதிகமாக இருந்தது.

மகிழ்ச்சியும் பாராட்டும் :

இதையடுத்து எட்னா, அந்த பணத்தில் தன்னைப் போன்ற மேலும், 2 ஏழைப் பெண்களின் கல்விச் செலவுக்கு கட்டணம் செலுத்த உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மருத்துவப் படிப்பு தொடர்பாக, அரசியல் ஆதாயம் தேடுவோர் மத்தியில், தன்னம்பிக்கையுடன் சாதித்த எட்னாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
*

Share this story