கடத்தல் கும்பல் தலைவன் கைது-வன்முறை; 29 பேர் உயிரிழப்பு..

By 
mecsi2

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 'போதைப்பொருள் கடத்தல்' எல் சாப்போவின் மகனான கஸ்மேன் கைது செய்யப்பட்டதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்து வாகனங்களுக்கு தீ வைத்தனர். குலியாகன் விமான நிலையத்திற்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 விமானங்கள் சேதமடைந்தன.

இந்த வன்முறையைத் தொடர்ந்து விமான சேவை நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படை தரப்பில் 10 பேர் என மொத்தம் 29 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை மந்திரி லூயிஸ் கிரசென்சியோ சந்தோவல் கூறினார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். வன்முறையின் மையப்பகுதியான சினலோவா தலைநகர் குலியாகன் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓவிடியோ கஸ்மேன் இப்போது அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

Share this story