'ஈஸ்டர்' என்றால் என்ன பொருள்.?

By 
es

இயேசு இவ்வுலகில் மனிதனாக பிறந்து, குற்றமில்லாத பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். 

வேத வாக்கியங்கள், தீர்க்க தரிசனங்கள் மூலம், மனிதர்களுக்கு நித்திய வாழ்வை அளிக்கும்படியாக சிலுவையிலே பல சித்திரவதைகளை அனுபவித்து, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். 

அதன் பிறகு, மூன்றாம் நாளிலே சர்வ வல்லமையுடன் உயிர்த்தெழுந்தார். இதன் மூலம் இறப்புக்குப் பின் உள்ள நித்திய வாழ்க்கையை மனிதர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட கி.பி 33-ம் ஆண்டில் இருந்து உயிர்த்தெழுந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

எனினும், கி.பி.325-ல் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட கான்ஸ்டான்டைன் மன்னர் காலத்தில் இருந்து, தான் ஈஸ்டர் பண்டிகை பிரபலம் ஆனது. 

ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காகவே, அப்போது தனிச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

‘ஈஸ்டர்’ என்ற வார்த்தைக்கு ‘வசந்த காலம்’ என்ற அர்த்தம் உண்டு. 

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய அதிசய பூ ‘ஈஸ்டர் லில்லி’. 

இந்தப்பூ இயேசு உயிர்த்தெழுந்த காலத்தில், அதிகமாக பூப்பதால் உயிர்த்தெழுந்த திருநாளிற்கு ‘ஈஸ்டர்’ எனப்பெயர் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

மற்றும், இது இஸ்ரவேல் மக்களின் ‘பாஸ்கா’ என்னும் ‘கடந்து போதல்’ பண்டிகையை நினைவுபடுத்துகிறது.

இயேசு, இவ்வுலகில் வாழ்ந்தபோது அனைவரிடத்திலும் அன்புள்ளவராகவும், நன்மை செய்கிறவராகவும் வாழ்ந்தார். 

சிலுவையிலே தன்னை அடித்து துன்புறுத்தி யவர்களையும், தனக்கு தண்டனை அளித்தவர்களையும், மனப்பூர்வமாக மன்னித்தார். அவர்களிடத்திலும் அன்பு செலுத்தினார்.

இவ்வாறு, மன்னித்து அன்பு செலுத்தும் இறை குணம் மனிதனுக்கும் வரவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். 

அதேபோன்று, இயேசு மனிதர்கள் மீதுள்ள பேரன்பால், தான் முழு மனுக்குலமும் நிலையான நித்திய வாழ்வை பெறும் பொருட்டு, சிலுவையிலே தன்னுடைய உயிரையே கொடுத்தார்.

‘ஒருவன் தன் சிநேகிதருக்காக கொடுக்கப்படும் ஜீவனைக் காட்டிலும் பெரிய அன்பு வேறொன்றுமில்லை’. 

இதன் மூலம், ஒவ்வொரு மனிதர் மீதும், அவர் வைத்த அன்பு சிலுவையில் வெளிப்பட்டது.

‘நாமும் இன்று சக மனிதர்களிடத்தில் எந்த ஏற்ற தாழ்வுகளும், எதிர்பார்ப்புகளும் இன்றி, அன்பு செலுத்துகின்றோமா?’ என்பதை ஒவ்வொருவரும் இந்த உயிர்த்தெழுந்த நாளில் நினைத்துப் பார்க்க வேண்டும். 

சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துபவராக, பிறருக்கு உதவும் குணமுள்ளவராக, பிறருடைய குற்றங்களை மன்னிப்பவராக வாழ்ந்து, இயேசுவின் அன்பை பிரதிபலிப்பவர்களாக மாறி, இந்த உயிர்த்தெழுந்த நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து கொண்டாடுவோம்.

Share this story