அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? : 5 பேர் தீக்குளிக்க முயற்சி; போலீஸ் குவிப்பு..

By 
jalli3

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதற்கு மும்முரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகை அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்துவது தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டியினர் மாவட்ட கலெக்டரிடம் மனுஅளித்து வந்தனர்.

இங்கு பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியை அவனியாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் நடத்துவதாகவும், அதில் தற்போது அனைத்து சமுதாய மக்களையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக இருதரப்பினரிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. நீதிமன்றம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து போட்டியை நடத்துமாறு அறிவுறுத்தியது.

ஆனால் இதை ஏற்க மறுத்த ஒரு தரப்பினர் மேல்முறையீட்டு மனு செய்தனர். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நிர்வாகம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தாங்கள் தான் நடத்துவோம் என 2 தரப்பினரும் கூறிவருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று மீண்டும் இருதரப்பினரையும் அழைத்து கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது கலெக்டர் அலுவலக போர்டிக்கோவில் 3 பேர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தென்கால் விவசாய சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டி சார்பில் இன்று தனித்தனியே போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து அவனியாபுரம், மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில் கோரிக்கையை வலியுறுத்தி தென்கால் பாசன விவசாய சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டு மாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

Share this story