ஆபாச சாட்டிங் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழக இளைஞர்கள் : அதிர்ச்சி தகவல்..

By 
vaccan

சமூக வலைதளங்களை பயன்படுத்தி சில கும்பல் பணம் பறிப்பு செயலை பிரதானமாக செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறது. அதுபோன்ற ஒரு கும்பலிடம் சிக்கி, அழகிபோல் பேசி நடிக்கும் வேலை பார்த்து வந்த தமிழக வாலிபர் ஒருவர், அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்துள்ளார். ஆயிரக்கணக்கான தமிழக வாலிபர்கள் அந்த கும்பலிடம் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் நீதிராஜன் (வயது 28). டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ள அந்த வாலிபர், வேலையில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கம்போடியா நாட்டில் அதிக ஊதியத்துக்கு கம்ப்யூட்டர் தொடர்பான வேலை வாங்கி தருவதாக கொழுந்தூரை சேர்ந்த மகாதீர் முகம்மது என்பவர் கூறி உள்ளார்.

இதனை நம்பிய நீதிராஜனின் குடும்பத்தினர், அவர் கேட்டபடி ரூ.2.50 லட்சம் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் வாலிபர் நீதிராஜனை சுற்றுலா விசாவில் கம்போடியாவுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் கூறியபடி நீதிராஜனுக்கு வேலை வாங்கி தரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு மாறாக சீனா நாட்டு கம்பெனி ஒன்றிற்கு அவரை 3 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்றுவிட்டார்.

அமெரிக்காவை சேர்ந்த ஆண்களிடம் போனில் பெண் குரலில் பேசி, அவர்களை மயக்கி பணம் செலுத்த வைக்க வேண்டும் என்று அவரிடம் அந்த கம்பெனி கூறியிருக்கிறது. அதற்கு மறுத்த நீதிராஜனை அறையில் அடைத்து வைத்து உணவு வழங்காமலும், உடலில் மின்சாரம் பாய்ச்சியும் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் வேறுவழியின்றி அந்த நிறுவனம் கூறியது போல் மாடல் அழகி போல் பேசி அமெரிக்க வாலிபர்களை மயக்கும் வேலையை அவர் செய்து வந்துள்ளார்.

ஆனால் அந்த வேலை பிடிக்காத நீதிராஜன், எப்படியாவது சொந்த ஊருக்கு தப்பி சென்றுவிட வேண்டும் என்று கருதினார். அதன்படி கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தை நாடி உள்ளார்.அவர்களின் மூலம் வாலிபர் நீதிராஜன் கம்போடியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

இதையடுத்து நீதிராஜனிடம் வேலை மோசடி செய்த மகாதீர் முகம்மது மற்றும் அவரது தாய் மீது ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் அவர்கள் இருவர் மீதும் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். மோசடி புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்போடியா நாட்டில் மோசடி நிறுவனத்திடம் சிக்கி சித்ரவதைக்குள்ளானது குறித்து நீதிராஜன் கூறியதாவது:-

கம்போடியா நாட்டில் நல்ல ஊதியத்துக்கு டேட்டா எண்டரி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக கூறி எங்களிடம் கொழுந்தூரை சேர்ந்த மகாதீர் முகம்மது மற்றும் அவரது தாய் ரூ.2.50 லட்சம் வாங்கினர். மேலும் என்னை மகாதீர் முகம்மது கம்போடியாவுக்கு சுற்றுலா விசாவில் அழைத்து சென்றார். அங்கு அவர் முதலில் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.

மேலும் என்னை சீன நிறுவனம் ஒன்றில் 3 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்று விட்டார். சமூக வலைதளங்களில் போலி ஐ.டி.யை உருவாக்கி, அதன் மூலம் அமெரிக்க வாலிபர்களை தொடர்பு கொண்டு பேசி மயக்கி பணம் பறிப்பதே அந்த வேலை. என்னை அதேபோன்று அமெரிக்க வாலிபர்களிடம் பேசி மயக்கி, அவர்களை குறிப்பிட்ட நிதி நிறுவனங்களில் பணம் டெபாசிட் செய்ய வைக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த என்னை உணவு வழங்காமல் அறையில் அடைத்து வைத்தனர்.

மேலும் உடலில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தனர். இதனால் வேறு வழியின்றி அவர்கள் கூறிய வேலையை பார்த்து வந்தேன். ஆனால் அந்த வேலையை பார்க்க எனக்கு மனம் இல்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பிவர இந்திய தூதரகத்தை நாடினேன். சட்ட விரோதமாக தங்கி இருந்ததால் கம்போடியா நாட்டுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் செலுத்தி விட்டு இந்திய தூதரக உதவியால் சொந்த ஊருக்கு திரும்பினேன்.

கம்போடியா நாட்டில் உள்ள அந்த நிறுவனத்தில் என்னை போன்று சுமார் 1,500 தமிழக வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அந்த கும்பலிடம் சிக்கி அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் தினமும் பல்வேறு சித்ரவதையை அனுபவிக்கிறார்கள். ஆகவே என்னை போன்று அவர்களையும் மீட்டு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story