கட்டபொம்மன் சிலைக்கு இளைஞர்கள் பேரணி : போலீஸ் தடியடி..
 

katta

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கரூரில் ஆண்டுதோறும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் சைக்கிளில் பேரணியாக சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அப்போது அந்த கழகத்தை சேர்ந்தவர்கள் தேவராட்டம் ஆடியவாறு செல்வார்கள்.

அந்த வகையில் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் இன்று கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி செல்ல ஏற்கனவே போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் அளித்து இருந்தனர். இதற்கிடையே கரூரில் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் விதித்துள்ள தடை தற்போது வரை அமலில் இருந்து வருகிறது.

இருந்தபோதிலும் இன்று காலை வழக்கம் போல் சைக்கிள் பேரணி செல்வதற்காக வீரபாண்டியன் பண்பாட்டுக்கழகத்தை சேர்ந்த இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கரூர் தாலுகா அலுவலகம் அருகில் திரண்டனர். முன்னதாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பேரணியாக செல்ல முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தடையை மீறி பேரணி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இளைஞர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதி போர்க்களம் போல் மாறியது.

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து தாலுகா அலுவலகம் முதல் பஸ் நிலையம் வரை 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் சில மணி நேரம் பதட்டம் நிலவியது.
 

Share this story