ஏழைகள் இல்லாத புதிய இந்தியா : ஜனாதிபதி உரை

murmu3

பாராளுமன்ற மைய மண்டபத்துக்கு திரவுபதி முர்மு சென்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரத்தில் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் உரையாற்றுகிறேன். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம். 2047-ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்.

அதில் , பழங்காலத்து பெருமையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்க வேண்டும். இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் சவால் நிறைந்ததாக இருக்கும். 2047-ம் ஆண்டில் முழு வளர்ச்சியை காண்பதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும்.

அனைத்து தரப்பினரும் நல்ல நிலையில் இருக்கும் நிலை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக வேண்டும். வெளிநாடுகளில் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுய சார்பு நாடாக மாறி உள்ளது. இந்தியா நவீன கட்டமைப்பை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தை அடைந்திருக்கிறது. 9 ஆண்டுகளில் இந்தியா வின் மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது.

நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது. நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது.

மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது. நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளன. ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பாக, இளைஞர்கள் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள் ஆகும். முன்பு வரி திரும்பப்பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்த சில நாட்களுக்குள் பணம் திரும்ப பெறப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் வெளிப்படைத் தன்மையுடன் வரி செலுத்துவோரின் கண்ணியமும் உறுதி செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அரணாக விளங்கியது.

கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது. கொரோனா காலத்தில் ஒரு ஏழைக்கூட பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊழல் என்பது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பது அரசின் தெளிவான கருத்து ஆகும்.

கடந்த ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது. ஊழலை ஒழித்து பினாமி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஊழலில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஊழலை ஒழித்திருக்கிறோம். குற்றமிழைத்து வெளிநாட்டுக்கு தப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம். சரியாக முடிவுகள் காரணமாக பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

நிலையான மற்றும் உறுதியான முடிவெடுக்கும் அரசால் நாட்டு மக்கள் பலன் பெறுகின்றனர். பழங்குடியினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வளர்ச்சி குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பழங்குடி பெண்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எந்த ஒரு பணித்துறையிலும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது. இதனால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அரசின் திட்டங்களால் பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்பது குறைந்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம். ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது.

முன் மாநில மாவட்டங்கள் திட்டம் மேலும் 500 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 50 கோடி பேர் அரசின் இலவச மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழை, எளியோர் மருத்துவ வசதி பெற்று உள்ளனர். கரீப் கல்யாண் யோஜன திட்டம் மூலம் கோடிக் கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறு கின்றனர். 2014-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 260 மருத்துவ கல்லூரிகளை அரசு கட்டியுள்ளது.

மாவட்டங்கள் தோறும் மருத்துவ கல்லூரி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறோம். புத்தாக்க தொழில்கள் எண்ணிக்கை பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது. நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெண்களின் ஆரோக்கியத்திலும் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். கேலோ இந்தியா திட்டம் மூலம் திறமையான விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிமைத்தனம், காலனி ஆதிக்கத்தை நினைவூட்டம் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. ராஜ பாதையை கடமை பாதை என பெயர் மாற்றியதன் மூலம் அடிமைத்தன விசயங்கள் மாற்றப்பட்டுள்ளன. பிரமோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. அரசின் புதிய முயற்சிகளால் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது.

ஐ.என்.எஸ். விக்ராந்த் விமான தாங்கி கப்பலை நாமே கட்டியுள்ளோம். தனியார் நிறுவனம் கூட செயற்கைகோளை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பசுமை வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது. ஜி.20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளை காண இந்தியா முயற்சிக்கிறது. இவ்வாறு ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது.

Share this story