சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! - கேரளா அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..

By 
silanthi

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று கேரளா அரசிற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட இடத்தில் சிலந்தி என்கின்ற ஆற்றின் குறுக்கே தற்பொழுது கேரளா அரசு தடுப்பணை ஒன்றை விறுவிறுப்பாக கட்டி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த ஆற்றினுடைய நீரானது அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 

ஆகவே இந்த சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்பட்டால், அமராவதி அணைக்கு வருகின்ற நீரின் அளவு பெருமளவு குறைந்து விடும். மேலும், அந்த அணையை மட்டுமே நீருக்காக நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் அவர்களுடைய கால்நடைகளும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயமும் ஏற்படும். 

இந்த சூழலில் இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அந்த அணையை கட்ட விடாமல் தடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பலரும் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு உடனே நிறுத்த வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதியின்றி எந்த கட்டுமானமும் அவர்களால் மேற்கொள்ளப்படக்கூடாது என்கின்ற எச்சரிக்கையையும் பசுமை தீர்ப்பாயம் தற்பொழுது வழங்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story