அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

By 
opsepsnews

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி தங்களுடைய வாதங்களை முன் வைத்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்காலக் கோரிக்கையைத் தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்ததாகவும், நிலுவையில் உள்ள பிரதான வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினர்.

பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் தான் கட்சியிலிருந்து சிலரை நீக்கியதாகவும், அதற்குத் தனக்கு உரிமை உள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக ஓபிஎஸ் சார்பில் பதிலளிக்கப்பட்டது. பின்னர், இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் இடைக்காலக் கோரிக்கையை நிராகரிக்கும் போது பிரதான வழக்கைத் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுறை தான். ஓபிஎஸ் நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதித்த தடையை உறுதி செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அடுத்தடுத்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வருவது ஓபிஎஸ்ஐ அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Share this story