திருக்கோவில்களில் 10,000 பணியாளர்கள் நியமனம் : தமிழக அரசு முடிவு

By 
Appointment of 10,000 employees in temples Government of Tamil Nadu

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, திருக்கோவில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, திருக்கோவில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, முதுநிலை திருக்கோவில்களான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் உட்பட 47 கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோவில் வாரியாக எத்தனை பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்புக்கு தேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதுநிலை அல்லாத திருக்கோவில்களான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில், திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், பண்பொழில் திருமலைக்குமார சுவாமி கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 

கடலூர் மாவட்டம், மணவாளநல்லூர், கொளஞ்சியப்பர் கோவில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவில் உட்பட 489 கோவில்களுக்கு பாதுகாப்பு பணியாளர்களும் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

அதற்கான கணக்கெடுப்பு பணிகள் திருக்கோவில் அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. 

இப்பணிகள் முடிவடைந்தவுடன், முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
*

Share this story