திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் திருட்டு : கொள்ளை கும்பல் அடையாளம் தெரிந்தது..
 

By 
robbery3

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் தேசிய மயமாக்கப்பட்ட 3 வங்கி ஏ.டி.எம்., ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ''கொள்ளை கும்பல் ஏ.டி.எம் மையங்களை முன்கூட்டியே நோட்டமிட்ட பிறகே திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ கோல்ட் வாகனத்தில் முகத்தை மூடியபடி மங்கி குல்லா அணிந்த 6 பேர் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு மையத்திலும் ஷட்டரை இறக்கிவிட்டு காஸ் வெல்டிங் மூலம் 20 நிமிடங்களில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.

வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரை இணைக்கும் 9 முக்கிய சாலை பகுதிகளிலும், மாவட்டத்தின் புறவழிச்சாலை பகுதிகளிலும், சுங்கச்சாவடிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசார் கொள்ளை கும்பலை நெருங்கி விட்டதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டனர். ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்று கர்நாடக மாநிலத்தில் நிரந்தரமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தனர். திருவண்ணாமலை நகரப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாக இருக்கும் ஏடிஎம்களை நோட்டமிட்டனர். பின்னர் கொள்ளையடிக்க கூடிய ஏடிஎம் மையங்களை அவர்கள் தேர்வு செய்தனர்.

கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னதாக பணத்தை கொள்ளையடித்து விட்டு எந்த வழியாக செல்வது என ஆய்வு செய்தனர். சுங்கச்சாவடி இல்லாத பாதை எது, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத சாலைகள் எது என்பதை நன்கு கண்டறிந்து துல்லியமாக திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி உள்ளனர். ஓரிரு நாட்களில் கொள்ளை கும்பல் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Share this story