செய்தி வாசிப்பாளரை கொல்ல முயற்சி : மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு
 

media4

பாகிஸ்தானில் உள்ள ஒரு டி.வி. நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வருபவர் மார்வியா மாலிக் (வயது 26). இவர் பாகிஸ்தானில் முதல் திருநங்கை டி.வி. தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றவர்.

இவர் திருநங்கைகள் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தார். இவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அவர் லாகூரில் இருந்து வெளியேறி வேறு ஒரு இடத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்வியா மாலிக் ஒரு ஆபரேஷனுக்காக மீண்டும் லாகூர் வந்தார். நேற்று இவர் அங்குள்ள ஒரு மருந்து கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் மாலிக் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ஷ்ட வசமாக அவர் உடலில் குண்டு பாயாததால் உயிர் தப்பினார். அவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம மனிதர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அவர்கள் யார்? என்று தெரியவில்லை. இது குறித்து மார்வியா மாலிக் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். திருநங்கை மாலிக் இதற்கு முன் அளித்த பேட்டியில், மற்ற மாற்று திறனாளிகள் போல எனக்கு எனது குடும்பத்தினரிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. நான் சொந்தமாக சின்ன சின்ன வேலைகளை செய்து எனது படிப்பை தொடர்ந்தேன்.

ஒரு செய்தி தொகுப்பாளராக ஆக வேண்டும் ஆசைப்பட்டேன். அதற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதால் எனது கனவு நனவாகி விட்டது என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார்.

Share this story