அயோத்தி விமான நிலையம்: சென்னை உள்பட 8 முக்கிய நகரங்களில் இருந்து விமான சேவை..

By 
ayodhya1

அயோத்தியின் மரியதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் வருகின்ற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற டிசம்பர் 30ம் தேதி திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படையின் ஏர்பஸ் A320, நேற்று டிசம்பர் 22ம் தேதி அன்று அயோத்தி விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது (சோதனையோட்டம்). மேலும் அடுத்த ஆண்டு ராமர் கோயில் திறப்பதற்கு முன்னதாக விமானப் பயணத்திற்கான மையமாக மாறுவதற்கு தயாராகி வரும் நிலையில், இந்த சோதனை நிகழ்வு நடைபெற்றது. 

பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ வெளியிட்ட தகவலின்படி டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் கோவா போன்ற முக்கிய நகரங்களுக்கு விமானங்களை ஸ்ரீ ராமர் விமான நிலையத்திற்கு இயக்கவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

"அயோத்தியில் விமான ஓடுதளம் மிகவும் சிறியது என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு 178 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. இவ்வளவு சிறிய பகுதியில் பெரிய சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியாது. ஆனால் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

மாநில அரசு 821 ஏக்கர் நிலம் வழங்கியதை அடுத்து, புதிய விமான நிலையத்தை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. டிசம்பர் 15க்குள் புதிய விமான நிலையம் தயாராகி விடும்" என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இம்மாத துவக்கத்தில் கூறினார் என்பது அனைவரும் அறிந்ததே. 

சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அயோத்தியின் விமான நிலையம் நகரின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று கூறினார். "6500 சதுர மீட்டர் கொண்ட இந்த விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் இரண்டு முதல் மூன்று விமானங்களை தாங்கும் பலம் கொண்டது. 

இப்போது 2200 மீட்டர் என்ற அளவில் உள்ள ஓடுபாதை, இரண்டாவது கட்டத்தில் 3700 மீட்டர் வரை நீட்டிக்கப்படும். இது அனைத்து சர்வதேச விமானங்களும் அயோத்தியில் தரையிறங்க உதவும்," என்று அவர் மேலும் கூறினார்.

Share this story