ரசாயனம் ஜாக்கிரதை : சென்னையில், 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

koy3

மாம்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து அதிகரிக்கத் தொடங்கி விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழ கடைகளில் ரசாயனம் மூலம் வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதிஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, ராமராஜ், ஏழுமலை மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 4 மணி முதல் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 30 கடைகளில் ரசாயனம் மூலம் மாம்பழங்கள், வாழைப்பழங்கள் செயற்கையான முறையில் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமார் 5 டன் மாம்பழங்கள் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதிஷ் குமார் கூறியதாவது:- வியாபாரிகள் சிலர் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து விதிமுறைகளை மீறும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற பழங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். மாம்பழங்களை எப்படி பழுக்க வைக்க வேண்டும் என்பது குறித்து கோயம்பேடு பழ மார்க்கெட் வியாபாரிகள் இடையே உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
 

Share this story