11 தொகுதியில் அதிமுகவை 3ஆம் இடத்திற்கு தள்ளிய பாஜக.! - அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..

By 
lok22

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 11 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.  28 தொகுதிகளில் அதிமுக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் யார் அதிக தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என போட்டியானது திமுக, அதிமுக, பாஜக இடையே நிலவுகிறது. தற்போது வரை திமுக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக விருதுநகர் தொகுதியிலும், பாஜக கூட்டணியில் உள்ள பாமக தருமபுரி தொகுதியிலும் முன்னிலை பெற்று வருகிறது. 

இதனிடையே தமிழகத்தில் யார் இரண்டாம் இடத்தை பிடிப்பார்கள் என்ற போட்டியானது உருவாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது எதிர்கட்சியாக உள்ள அதிமுக 11 தொகுதிகளில் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை - 4 ,5, 6, 7, 8, 9 , 10ஆகிய 7 -சுற்றுகளில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் 13,783 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். 

2ஆம் இடத்திற்கு போட்டி போடும் பாஜக- அதிமுக

பாஜகவின் முக்கிய பிரபலங்கள் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளனர். அந்த வகையில் கோவையில் அண்ணாமலை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல் முருகன், மத்திய சென்னையில் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம், தேனியில் டிடிவி தினகரன்,  மதுரையில் ஶ்ரீனிவாசன்,  ஆகியோர் இரண்டாம் இடத்தை தக்கவைத்து வருகின்றனர்.

இன்னும் 10க்கும் மேற்பட்ட சுற்றுக்கள் உள்ள நிலையில், யார் எந்த இடத்தை பிடிப்பார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் அதே நேரத்தில் அதிமுக 3வது இடத்திற்கு சென்றது. அக்கட்சி நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

 

Share this story