பாஜக தனித்து 370 இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை..

By 
modibjp

பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்திற்கும் சென்றுள்ளார். அதன்படி 7,550 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாஜக மட்டும் தனித்து 370 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்தார். மேலும் தனக்கும் தனது கட்சிக்கும் பழங்குடி சமூகம் என்பது வாக்கு வங்கி அல்ல, அது நாட்டின் பெருமை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி மத்திய பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்ய வந்ததாகவும் தெரிவித்தார். மேலும். "என்னுடைய இந்த மாநில பயணம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன, பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. சிலர், மோடி மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஜபுவாவில் இருந்து தொடங்குகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் இங்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வரவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் இங்கு வந்திருக்கிறேன்..” என்று கூறினார்.

ஜபுவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, முந்தைய தேர்தல்களை விட ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக 370 வாக்குகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பாஜக 370 லோக்சபா இடங்களைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பழங்குடியின சமூகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, "எங்களைப் பொறுத்தவரை பழங்குடி சமூகம் என்பது வாக்கு வங்கி அல்ல; அவர்கள் நமது நாட்டின் பெருமை" என்று கூறினார்.

2024 தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடியின் மத்தியப் பிரதேச பயணம், குறிப்பாக பழங்குடியின சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட 6 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்திற்கு சென்றுள்ளது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது..

தனது பயணத்தின் போது, பிரதமர் மோடி ஆஹர் அனுதன் யோஜனா திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்களுக்கு மாத தவணை வழங்குவது உட்பட பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் நீர் வழங்கல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் நகர்ப்புற மாற்றத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் பிரதமர் மோடி, இவை தவிர, அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரத்லம் ரயில் நிலையம் மற்றும் மேக்நகர் ரயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் உள்ளிட்ட பல ரயில் திட்டங்களையும் தொடங்கி வைத்தார், 

பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் கிராம மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்தார், இது அடிமட்ட அதிகாரமளித்தல் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

இவை தவிர, ஜபுவாவின் 50 கிராம பஞ்சாயத்துகளுக்கான 'நல் ஜல் யோஜனா' திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் சுமார் 11,000 வீடுகளுக்கு குழாய் நீரை வழங்கப்படும்.

தனது நிகழ்ச்சியின் போது, மாநிலத்தின் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தந்தியா மாமா பில் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்... 170 கோடியில் கட்டப்படும் இந்தப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை வழங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் 559 கிராமங்களுக்கு, அங்கன்வாடி பவன்கள், நியாய விலைக்கடைகள், சுகாதார மையங்கள், பள்ளிகளில் கூடுதல் அறைகள், உள் சாலைகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக 55.9 கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவித்தார்..

Share this story