காஸா மருத்துவமனையில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் சடலங்கள்: மனதை உலுக்கும் போர்க்கள நிகழ்வுகள்..

By 
cn1

பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது யாரும் எதிர்பாராத வகையில் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலைத் தொடுத்தது. இதில், 1,400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமான மக்களையும் ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் இருந்து காஸாவில் 3,300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான் போர் தீவிரமடைந்துள்ளது..

மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவப் பொருட்களை காஸாவிற்கு உடனடியாக அனுப்பப்படும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. நீண்ட கால மனிதாபிமான நெருக்கடி உருவாகும் அபாயம் இருப்பதாக ஐநா அச்சம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு காஸா பகுதிக்கான உணவு, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் தடை செய்தது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை இந்த நிலையே தொடரும் என்றும் இஸ்ரேல் கூறி  உள்ளது.

மேலும் காஸாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் செயல்படாமல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் குண்டுவெடிப்புகளால் சேதமடைந்துள்ளன, செவ்வாயன்று காசா நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு -மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்  நடத்திய ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்தது தான் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியது. எனினும் இந்த குற்றச்சாட்டை போராளி குழு நிராகரித்தது. இரு தரப்பினரும் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இஸ்ரேல் சென்றுள்ளார். ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும் பல அரபு நாடுகள் ஹமாஸுடன் இணைந்து இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளன;

இந்த மருத்துவமனை தாக்குதலில் 471 பேர் கொல்லப்பட்டதாக காசான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரை வழி தாக்குதல் நடைபெறும் எதிர்பார்க்கப்படும் சூழலில், வாடி காஸா எனப்படும் நதிப் பள்ளத்தாக்கின் தெற்கே செல்லுமாறு 1.1 மில்லியன் மக்களை இஸ்ரேல் உத்தரவிட்டதை அடுத்து, சுமார் 600,000 மக்கள் வடக்கு காசாவை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில் காஸா ஐரோப்பிய மருத்துவமனை இயக்குனர் யூசுப் அல் அகாத் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மருத்துவர் முன்னிருக்கும் படுக்கையில் 6 குழந்தைகளின் சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. மருத்துவர் யூசுப் அல் அகாத் பேசிய போது “ இந்த குழந்தைகளை பாருங்கள்.. இவர்களை கொன்றது யார்?

சுதந்திர உலகமே, ஒடுக்கப்பட்டு துயறுற்று இருக்கும் இந்த மக்களின் மீது படுகொலை நடத்தப்பட்ட போது எங்கே சென்றாய்.. உலகம் பார்க்கட்டும், இவர்கள் வெறும் குழந்தைகள்..” என்று உருக்கமாக பேசி உள்ளார். காண்போரின் மனதை உலுக்கும் இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

Share this story