சென்னையில், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

By 
bomb6

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளி என பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, பள்ளிகளில் இருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்து சென்றனர். இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மோப்ப நாய்கள் உதவியுடன் அப்பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.  வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ் இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட வரம்பில் உள்ள ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் நாசவேலை தடுப்பு சோதனைக்காக போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது வதந்தி என தெரியவந்தது. அதேபோல், கடந்த 2022ஆம் ஆண்டிலும், பெங்களூருவில் உள்ள சுமார் 30 பள்ளிகளுக்கு தினமும் இதே வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story