சென்னையில் போகி கொண்டாட்டம், புகை மண்டலம் : சில நிகழ்வுகள்..

By 
Boogie Celebration in Chennai, Smoke Zone Some Events ..

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நாளை தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக, முந்தைய நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, வீட்டில் பழைய பொருட்களை வாசலில் போட்டு கொளுத்துவது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்த வகையில், போகி பண்டிகையான இன்று தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினார்கள்.

சென்னையில் எப்போதும் போல சிறுவர்-சிறுமிகள் அதிகாலையிலேயே எழுந்து, போகி பண்டிகையை மேளம் அடித்தபடி வரவேற்றனர். 

உற்சாக ஆட்டம் :

தங்களது வீடு முன்பு பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்தி, உற்சாகமாக நடனமும் ஆடினார்கள்.

இதனால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று கடுமையான புகை மூட்டம் காணப்பட்டது. 

குறிப்பாக, வடசென்னையில் பல பகுதிகளில் அதிகளவில் புகை மூட்டம் இருந்தது. புழல், செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் புகை மூட்டம் காணப்பட்டது.

இதனால், சென்னையில் பல பகுதிகள் புகை மூட்டத்தில் மூழ்கின.

வாகன ஓட்டிகள் அவதி :

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் மூடு பனியும் காணப்பட்டது. 

இந்த மூடு பனியுடன் புகை மூட்டமும் சேர்ந்ததால், சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களில் சென்றவர்களும் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே பயணம் செய்தார்கள்.

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். 

மெதுவாகச் சென்ற ரயில்கள் :

இன்று காலை 8 மணி அளவில், கடுமையான பனி மூட்டம் காரணமாக சென்னையில் திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரயில், அதே போல் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் சென்ற புறநகர் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

போகி பண்டிகையை வரவேற்கும் வகையில், இன்று பெண்கள் வீடுகள் முன்பு வண்ணக் கோலங்களை போட்டனர். இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் வண்ணமயமாகவும் காட்சி அளித்தன.

சிறுவர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றாக கூடி கோலமிட்டு மகிழ்ந்தனர்.
*

Share this story