ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

porunai

தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழாய்வு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட அரும்பொருட்கள் ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த அரும் பொருட்களை மக்கள் பார்வையிட்டு, பழங்கால வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் தொல்லியல் துறை அதிகாரிகள் சார்பில் நடந்த இடம் தேர்வு பணியில் பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெல்லையின் அடையாளமாகவும், தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையிலும் அங்கு அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து அங்கு ஆரம்ப கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று காலை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

மொத்தம் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு ரெட்டியார்பட்டி மலை பகுதியில் மொத்தம் 13 ஏக்கர் பரப்பளவு இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். 55 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

வெளிநாடுகளுடன் தமிழர்களின் தொடர்புகள் குறித்த பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் இதை சுற்றுலா தலமாகவும் பயன்படுத்தும் வகையில் இதன் அருகில் உள்ள உயரமான பகுதியில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 'வியூ பாயிண்ட்' அமைக்கப்பட உள்ளது.

இங்குள்ள தொலைநோக்கி மூலம் நெல்லையின் அழகை பார்க்கும் வசதி கிடைக்கும். மேலும் இங்கு மூலிகை தோட்டங்கள், கைவினைப் பொருட்கள், கலை, கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை மையங்கள், திறந்தவெளி திரையரங்கு என்று பல்வேறு அம்சங்களுடன் இந்த அருங்காட்சியக வளாகம் அமைக்கப்பட உள்ளது.
 

Share this story