ஆற்றில் மூழ்கிய சிறுவன், காப்பாற்ற சென்றவர்கள் என அடுத்தடுத்து 3 பேர் பரிதாப பலி..

By 
amar1

மதுரை ஏஸ்.ஆலங்குளம் பகுதியில் இருந்து 20 பேர் கொண்ட குழு பொங்கல் விடுமுறைக்காக கோவைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாவை முடித்துக்கொண்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்தவுடன் எச்சரிக்கை பலகை இருப்பதை அறியாமல் குளிப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு 20 பேர் கொண்ட குழு அமராவதி ஆற்றில் இறங்கி குளிக்க சென்றனர். அப்போது 10-ம் வகுப்பு மாணவன்  ஹரி (வயது 15) முதலில் குளிக்க அமராவதி ஆற்றில் இறங்கியுள்ளார்.

அப்போது ஹரியின் கால் பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக உறவினர் சின்னகருப்பு (31) சிறுவனை காப்பாற்ற இறங்கியுள்ளார். அவரும் மாட்டிக்கொண்டதால் அவரை மீட்க பாக்கியராஜ் (39) என்பவர் இறங்கியுள்ளார். மூவரின் கால்களும் பாறை இடுக்கில் சிக்கி கொண்டு தண்ணீரில் தத்தளித்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் 100 தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர்.

உடனடியாக தாராபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மூவரும் உயர்ந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஈஷா யோகா மையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற  மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this story