வட சென்னையில் சலசலப்பு..! தென் சென்னையில் கலகலப்பு.! - ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிய தமிழிசை & தமிழச்சி..

By 
chennaiss

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 1ம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பிறகு ஜூன் மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியில் தற்பொழுது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இன்று வடசென்னை பகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற திமுக வேட்பாளர் சேகர் பாபு மற்றும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் ஆகிய இருவரிடையே யார் முதலில் வந்தது என்பது குறித்த வாக்குவாதம் எழுந்தது. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் சற்று நேரம் சலசலப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் தென் சென்னையில் நடந்த விஷயமே வேறு என்கின்ற அளவிற்கு, ஒரு ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்சென்னை பகுதியில் பாஜக சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ள நிலையில், திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகின்றார். இன்று இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். 

அப்போது செய்தியாளர்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொண்டு, இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அந்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

Share this story