பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரலாமா?: முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு..

By 
modimks1

சென்னை தங்க சாலையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.4.181 கோடி மதிப்பிலான வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அரசு சென்னையின் வளர்ச்சிக்காக செயல்படுத்திய திட்டங்களை நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்தும் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கபேற்க வரவுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர், தமிழ்நாடு அரசு கோரிய நிதியை விடுவிக்காமல் ஓட்டுக்காக மட்டும் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

சென்னை மாநகரை இந்தியாவின் தலைசிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன். இது குறித்து அமைச்சர்களுக்குக் கட்டளையிட்டுள்ளேன். என்னை எம்.எல்.ஏ.வாகவும், மேயராகவும், துணை முதல்வராகவும், இப்போது முதல்வராகவும் ஆக்கியது வட சென்னைதான்.

சென்னைக்கு நாள்தோறும் புதிய புதிய திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.832 கோடி மதிப்பில் நவீனமயாக்கப்பட இருக்கிறது. இந்த வளர்ச்சித் திட்டங்களை நானே நேரடியாக தொடர்ந்து கண்காணிப்பேன்.

500 ஆண்டுகள் பழமையான சென்னையை நவீனமயமாக்குவதில் தி.மு.க.வுக்கு முக்கிய பங்கு உள்ளது. சென்னையின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் தி.மு.க. உருவாக்கியவைதான். தி.மு.க.வை உருவாக்கிய வடசென்னை பகுதியை தி.மு.க. அரசு முக்கியமாக நினைக்கிறது.

தமிழ்நாட்டுக்கு நிதி கேட்டால் பிரிவினைவாதி என்பதா? நாங்கள் பிரிவினை பேசவில்லை. ஒரு கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்றுதான் கேட்கிறேன். தேசபக்தி பற்றி தி.மு.க.வுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை. சென்னை வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி வந்து பார்க்கவே இல்லை. வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராதவர், ஓட்டு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வரலாமா? சென்னைக்காக மத்திய அரசு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Share this story