சென்னை வெள்ளம்: 17 பேர் உயிரிழப்பு; மக்களுக்கு அபாய எச்சரிக்கை..

By 
hrain2

மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில் 69 இடங்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி போக்குவரத்து நிலை, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவலை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

விமான நிலையத்திலிருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரைச் சாலையும் தடையற்ற போக்குவரத்து சாலைகளாக (Green Corridor) பராமரிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் 1 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவசர தேவைக்காக அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளைப் பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்: புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர்தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பெருநகரில் 69 இடங்களில், சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பதிவாகியுள்ள இறப்புகள்: 17 .

காவலர் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள்: துணை ஆணையர்கள் ஆயுதப்படை மற்றும் மோட்டார் வாகனம் ஆகியோர்கள் தலைமையில் மூன்று தனிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் சென்னைபெருநகர காவல் எல்லையில் உள்ள காவலர் குடியிருப்புகளுக்குச் சென்று அங்கு மழை நீர் தேங்கியிருப்பதை அப்புறப்படுத்தியும், மேலும் அவர்களுக்கு வேண்டிய தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

Share this story