முதலமைச்சர் என்னைக் கண்டித்தார் : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி மூவரசம்பட்டு குளத்தில் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக 5 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
மரணம் அடைந்த 5 பேருக்கும் சட்டசபையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மரியாதை செலுத்தும் வகையில் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். தீர்த்தவாரி நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் தளி ராமச்சந்திரன் கூறினார். இச்சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோவில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம்.
* கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.
*கடந்த ஆண்டு அனுமதியின்றி குடமுழுக்கு செய்ய முயன்றனர்.
* கோவிலை 5 பேர் வகித்து வருகின்றனர்.
* சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் முதலமைச்சர் என்னை அழைத்து கண்டித்தார்.
* இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.