12 மணி நேர வேலை மசோதா குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

By 
may4

சென்னை சிந்தாதிரிப் பேட்டை மே தின பூங்காவில் அமைந்து உள்ள மே தின நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 8 மணியளவில் மலர் அஞ்சலி செலுத்தினார். இதற்காக அவர் சிவப்பு நிற உடை அணிந்து வருகை தந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்க லட்சியங்கள் என்பது பொது உடமை சிந்தனையால் நிறைந்தது. தி.மு.க. ஆட்சியிலே பாட்டாளி வர்க்க சிந்தனையே மேலோங்கி நிற்கும். நங்கவரம் விவசாய கூலி தொழிலாளிக்காக போராடியவர்தான் நமது கலைஞர் என்பதை நாடு நன்கறியும். தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் நான் சந்தித்திருக்காவிட்டால் நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக ஆகி இருப்பேன் என்று சொன்னவர் கலைஞர்.

தலைவர் கலைஞர் எனக்கு வைத்த பெயர் ஸ்டாலின். 1969-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே தொழிலாளர் நலனுக்காக ஒரு நலத்துறையை உருவாக்கி தனி அமைச்சகத்தையே உருவாக்கினார். ரத்தம் சிந்தி போராடி உயிர் தியாகம் செய்து பல்வேறு தியாகங்களை செய்திருக்கிற தொழிலாளர்களை நினைவுபடுத்தும் வகையில் 1969-ல் மே முதல் நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாக அறிவித்து அதை சட்டமாக்கியவர் கலைஞர்.

தொழிலாளர்கள் ஓய்வு பெறுகிறபோது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் பணி கொடை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதும் கழக அரசுதான். விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பத்தை காப்பதற்காக தொழில் விபத்து நிவாரண நிதி திட்டத்தை ஏற்படுத்தியதும் கழக அரசுதான்.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தோடு, விவசாய தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம், மகளிர் நலவாரியம், மாற்றுத் திறனாளிகள் நலவாரியம், கோவில் பூசாரிகள் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், தூய்மை பணியாளர் நலவாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி தந்ததும் தி.மு.க. அரசுதான். 1990-ம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிற நேரத்தில் இந்த நேப்பியர் பூங்காவுக்கு மே தின பூங்கா என்று பெயர் சூட்டியவரும் நமது கலைஞர்தான்.

காரிலே வருகிறபோது பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் என்னிடம் கூறும்போது, சட்டமன்றத்திலே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மறைந்த வரதராஜன் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். மே தினத்தையொட்டி ஒரு நினைவு சின்னம் சென்னையில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோரிக்கை வைத்த உடனே சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்த போதே கலைஞர் அதை அறிவித்து செயல்படுத்தினார்.

அதை வரைபடமாக வரைந்து சட்டமன்றத்தில் காட்டி அதற்கேற்ப அமைந்தது தான் இந்த நினைவு சின்னம். இதே வழியில் நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்று நான் வகுத்த கொள்கை திட்டம்தான் இன்றைக்கு திராவிட மாடல் அரசாக அமைந்திருக்கிறது. எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. அதுதான் அடித்தளம். தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் இருந்த நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் செய்துதரப்பட்டுள்ளன.

இந்த 2 ஆண்டு காலத்திலே 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்க கூடிய அமைப்பு சாரா தொழிலாளர் குழந்தைகளுக்கு 1000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்துக்கும் மேலாக கடை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் நிறுவனங்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளோம். 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் படித்தவர்கள் வரை பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. இப்படி வேலை வாய்ப்பு பெற்றவர்களில் மாற்று திறனாளிகள், திருநங்கைகளும் இருக்கிறார்கள். இப்படி வரிசைபடுத்தி நான் சொல்லும் போது சமீபத்தில் சர்ச்சைகக்கான ஒன்று. தொழிலாளர் நலத்துறை சட்டமுன் வடிவு பற்றி ஒரு சர்ச்சை உருவானது. அதைநான் சொல்லியாக வேண்டும்.

தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அது மட்டுமல்ல அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். அதிலும் குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் அந்த வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கில்தான் தமிழ்நாடு அரசால் ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது.

இது அனைத்து தொழிற் சாலைக்கும் உண்டான சட்ட திருத்தமல்ல மிக மிக சில குறிப்பிட்ட தொழிற் சாலைக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் கட்டுப்பாட்டோடு அரசின் பரிசீலனைக்கு பிறகு பல மணி நேரம் குறித்து விதி விலக்கு வழங்கப்படும் என்பதுதான் சட்டத்தின் திருத்தம். தொழிலாளர்களை பாதுகாக்கும் பல்வேறு அம்சங்கள் அதிலே இருந்தது. ஆனாலும் தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அதிலே சில சந்தேகங்கள் இருந்தன. அதனால் பல்வேறு கோணங்களில் அது விமர்சனம் செய்யப்பட்டது.

தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்ட திருத்தமாக இருந்தாலும் தி.மு.க. தொழிற்சங்கமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் அதில் வேடிக்கை. அதற்காக நான் அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டுள்ளேன். தி.மு.க. எத்தகைய ஜனநாயக மாண்பு கொண்டது என்பது இதற்கு எடுத்துக்காட்டு. இத்தகைய விமர்சனம் வந்ததும் உடனடியாக அனைத்து தொழிற்சங்கத்தினரையும் கோட்டைக்கு அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி, அதற்கு பிறகு தொழிற்சங்க கருத்துக்களை கேட்டு, உடனடியாக எந்தவித தயக்கமும் இன்றி துணிச்சலோடு, அதை திரும்ப பெற்றுள்ள அரசு தான் நம்முடைய அரசு.

மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததும் அதை திரும்ப பெற ஓராண்டுக்கு மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக உழவர்கள் டெல்லியில் போராடினார்கள். வெயில், மழையில், பனியில் அவர்கள் போராடினார்கள். இதில் பல பேர் உயிர் இழந்தனர். இந்த மாபெரும் போராட்டத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே தொழிலாளர் உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this story