முதல்வர் குடும்பத்தோடு நெருக்கம்; போதைப்பொருளை விற்ற பணத்தை திமுக நிர்வாகிகளுக்கு கொடுத்த ஜாபர் சாதிக் : இபிஎஸ் குற்றச்சாட்டு..

By 
jafer

தமிழகத்தில் போதைப் பொருட்களை திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் நடந்த போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இபிஎஸ்:

முதல்வர் குடும்பத்தோடும், காவல்துறையோடும் ஜாபர் சாதிக் நெருக்கமாக பழகியிருப்பதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து ஜாபர் சாதிக் நிதி வழங்கியதாக புகார் வந்துள்ளது. பல ஆண்டுகளாக  வெளிநாடுகளுக்கு போதைப் பொருளை ஜாபர் சாதிக் விற்பனை செய்துள்ளார். 

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் அதிக அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்த போதைப்பொருட்களையும் விற்கும் இடமாக தமிழகம் மாறியுள்ளது. போதைப்பொருளுக்கு அடியானவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுகிறது.

பல ஆயிரம் கோடி போதைப்பொருளை விற்று அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்துள்ளார் ஜாபர் சாதிக். மத்திய அதிகாரிகள் போதைப்பொருளை பிடிக்கும் நிலையில் மாநில காவல்துறை என்ன செய்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகதத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல் மாபியா ஜாபர் சாதிக், தான் சம்பாதித்த பணத்தை திமுக நிர்வாகிகளுக்கு அளித்துள்ளார். போதைப்பொருள் கட்டுப்படுத்த தவறிய முதல்வர் பதவி விலக வேண்டும். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு ததமிழகத்தில் போதைப்பொருள் அதிக அளவில் புழங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

Share this story