காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் பரபரப்பு..

By 
luv

திருமணமாக இரண்டு வாரங்களே உள்ள நிலையில், காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி, பாதுகாப்பு கேட்டு காரிமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ராஹர தெருவை சேர்ந்த  செல்வகுமார். இவர் சிப்ஸ் கடை  நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜோதிபிரியா (22) தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரும் மாட்லாம்பட்டியை சேர்ந்த துணி வியாபாரி செல்வகுமார் (24) என்ற வாலிபரும்  கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஆனால, ஜோதிபிரியா குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடன் ஜோதிபிரியாவிற்க்கு திருமணம் நிச்சயம் செய்தனர். இந்த திருமணம் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற இருந்த நிலையில், இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை சுறுசுறுப்பாக செய்து வந்தனர்.

இதனிடையே, கடந்த 23ஆம் தேதி காலை  மருதாணி வாங்க கடைக்கு செல்வதாக கூறி சென்ற ஜோதிபிரியா மீண்டும் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் கடைக்கு சென்ற மகள் திரும்பி  வராததால் தந்தை செல்வகுமார், தோழிகள் வீடு உறவிணர்கள் வீடு என  பல்வேறு இடங்களில் தேடியும் மகள்  கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தரகோரி காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், ஜோதிபிரியா தனது காதல் கணவர் செல்வகுமாருடன் காரிமங்கலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்கவில்லை என்றும், காதலன் செல்வகுமாரை நேற்று மருதமலை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும், செல்வகுமாருடன் தான் வாழ்வேன்  எனவும், தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ஜோதி பிரியா புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார்  இருவரின் பெற்றோர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஜோதி பிரியாவை காதல் கணவர் செல்வகுமாருடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதேசமயம், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story