சென்னையை மிரட்டும் புயல்: அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் சார்பாக அவரச உத்தரவு

By 
storm4

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று முதல் நாளை இரவு வரை சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், புயலுக்கு பின் மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் சார்பாக அவரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் இந்த பருவ மழை காலத்தில் முதல் புயல் தற்போது உருவாகியுள்ளது.  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  

தற்போது  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெற்றுள்ளது. இந்த புயலானது சென்னையை ஒட்டி வட கடலோரப்பகுதியில் நிலவக்கூடும் இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் நகர்ந்து 05-12-2023 மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன் படி அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் மூர்த்தி களத்தில் இருப்பார் எனவும்,  அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மற்றும் முத்துசாமி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் மேயர்  ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆய்வப் பணியை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் பாதிப்பை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்  12 மாவட்டங்களுக்கு  ஆட்சியர்கள்,அதிகாரிகள்  தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Share this story