பட்டப்பகலில் துணிகரம் : வங்கியில் புகுந்து  ரூ.22½ லட்சம் கொள்ளை

banjap

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த வங்கியின் அருகே தான் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு), மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) ஆகியோரின் அலுவலகங்களும், கன்டோன்மென்ட் போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது.

இந்நிலையில் பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர். வங்கியின் வளாகத்தில் பாதுகாவலர் யாரும் இல்லை. இதை வசதியாக பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வங்கிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை ஆயுதங்களால் மிரட்டி உள்ளனர்.

பின்னர் நேராக காசாளர் அறைக்கு சென்ற ஒரு முகமூடி கொள்ளையன் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை காட்டி காசாளரை மிரட்டுகிறார். பின்னர் துப்பாக்கி முனையில் காசாளரை மிரட்டியவாறு அங்கிருந்த ரூ.22 லட்சத்து 48 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு, வெளியே தயாராக நின்ற ஸ்கூட்டரில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.

ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வங்கியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது கொள்ளையர்களில் 2 பேரில் ஒருவர் வங்கியின் வெளியே தயாராக நிற்பதும், மற்றொரு முகமூடி கொள்ளையன் துப்பாக்கியை கையில் மறைத்து வைத்தவாறு வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகளும் தெரிந்தது.அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வங்கியின் மேலாளர் அலுவலகம் மற்றும் காசாளர் அறையில் அலாரம் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது செயல்படவில்லை. கொள்ளையன் வங்கி வளாகத்திற்குள் நுழைந்தபோது எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியையும் யாரும் அழுத்தவில்லை என்றனர்.

மேலும் வங்கியின் பிரதான காசாளர் விடுமுறையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதே நேரம் நேற்று காசாளர் பணியில் தற்காலிக பணியாளர் ஒருவரை நியமித்துள்ளனர். கொள்ளையன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் பணியில் இருந்த காசாளர் பணத்தை அவரிடம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

வங்கியில் உள்ள அலாரம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்துள்ளது. அதனை சரி செய்யக்கோரி வங்கி அதிகாரியிடம் போலீசார் பலமுறை அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாத நிலையில் தான் இந்த துணிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

Share this story