2015 வெள்ளத்தைவிட பெரும்பாதிப்பை ஏற்படுத்தியதா மிக்ஜாம் புயல்...? வெதர்மேன் விளக்கம்..

By 
storm6

சென்னையில் மிக்ஜாம் புயல் நேற்று முதல் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இந்த புயலினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பேய் மழை பெய்வதனால் சென்னையே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில், இந்த மிக்ஜாம் புயலின் அடுத்தக்கட்ட நகர்வினால் எந்தெந்த பகுதிகளுக்கு அதிகளவில் மழை பெய்யும் என்கிற அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு வரை மழை தொடரும்.  புயல் எந்த அளவுக்கு கிட்ட நெருங்கி வருகிறதோ அதுவரை மழைப்பொழிவு தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். சில நேரங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்துக்கு பின் தற்போது தான் சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.

இரவில் முதலில் செங்கல்பட்டில் தான் மழை குறையத் தொடங்கும், அதன்பின்னர் சென்னையில் குறையும், இறுதியாக திருவள்ளூரில் குறையும். திருவள்ளூர் ஆந்திரா எல்லையில் இருப்பதன் காரணமாக அங்கு கடைசியாக மழை குறையத் தொடங்கும்.

நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று பிற்பகல் 1.30 மணிவரை சென்னை மீனம்பாக்கத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. நேற்று காலை 8.30 மணிக்கு 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்ததாகவும், இதையடுத்து 24 மணிநேரத்தில், அதாவது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 250 மி.மீ மழை பதிவாகி இருந்ததாகவும், இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை 85 மி.மீ மழை என மொத்தமாக மீனம்பாக்கத்தில் மட்டும் 415 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 390 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக பிரதீப் ஜான் கூறி இருக்கிறார்.

அதேபோல் 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது பெய்த மழையைவிட தற்போது அதிகளவில் மழை பெய்துள்ளதா என்கிற கேள்விக்கு பதிலளித்து அவர், 2015 தான் பெருமழை பெய்தது. தற்போதைய மிக்ஜாம் புயல் 2005-ஐ விட அதிகளவு மழைப்பொழிவை கொடுத்துள்ளதாகவும், 20 முதல் 30 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this story