சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் இழந்த மருத்துவர் தற்கொலை..

By 
gamb

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதால் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வந்தனர்.

இதையடுத்து தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த கணபதிபுரம் கோபால் தெரு மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 37). இவர் பி.பார்ம் படித்துவிட்டு மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், பிரணவ், தர்ஷன் என 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் வீட்டில் தாயார் தமிழ்செல்வியும் வசித்து வருகிறார். வினோத்குமாரின் மனைவி லதா தாம்பரத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். வினோத் குமாருக்கு ஆன்லைன் மூலம் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சூதாட்டத்துக்காகவும் மற்றும் குடும்ப செலவுக்காகவும் இணைய தளங்களில் உள்ள ஆப்கள் மூலம் சுமார் 20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடன் கொடுத்த தனியார் ஆப் நிறுவனங்கள் தொடர்ந்து கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தி நெருக்கடி கொடுத்து வந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே வினோத்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டில் இருந்த வினோத்குமார் தனது தாயார் தமிழ்செல்வியை அழைத்து தனக்கு தூக்கம் வருவதாகவும், அதனால் தான் தூங்கச் செல்வதாகவும் குழந்தைகளை கடைக்கு அழைத்து சென்று தின்பண்டம் வாங்கி கொடுக்கும்படி கூறினார்.

குழந்தைகளுடன் தாயார் வெளியே சென்ற போது வினோத்குமார் அறைக்கு சென்று புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த லதா தனது கணவர் இருந்த அறைக்கு செல்வதற்காக திறந்த போது மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார் பிணத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this story