துரை தயாநிதிக்கு, மூளை பகுதியில் 6 அடைப்புகள் அகற்றம்.?: மு.க.அழகிரியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..

By 
dd4

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகனும், முதல்வர் ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் காலை அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. சென்னையில் உள்ள தனது வீட்டில் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பரிசோதனைகளில் அவர் மூளை வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தெரிகிறது.

தொடர்ந்து, அதற்கான சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான துரை தயாநிதி அழகிரிக்கு இன்று சிகிச்சை மூலமாக மூளை பகுதியில் உள்ள 6 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடமும், தனது சகோதரர் மு.க.அழகிரி குடும்பத்தினரிடமும் அவர் கேட்டறிந்தார்.

Share this story