லட்சுமி தேவியின் எட்டு வடிவங்கள், வடகிழக்கு மாநிலங்கள் : பிரதமர் மோடி உரை

நாகலாந்து, திருமாபூரில் இன்று தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி,
"வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் வடகிழக்கின் எட்டு மாநிலங்களை பாஜக 'அஷ்டலட்சுமி' (லட்சுமி தேவியின் எட்டு வடிவங்கள்) எனக் கருதுகிறது. மாநிலங்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக உழைக்கிறது.
நாகாலாந்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த பாஜக கூட்டணி பாடுபடுகிறது. இதனால் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958 மாநிலத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது" என்றார். பிரசாரத்தில் பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:- சொந்த மக்கள் மீது அவநம்பிக்கை கொண்டு நாட்டை நடத்த முடியாது.
மாறாக அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் மட்டுமே நாட்டை முன்னேற்ற வேண்டும். முன்பு வடகிழக்கு மாநிலங்களில் பிளவு அரசியல் இருந்தது. இப்போது அதை தெய்வீக ஆட்சியாக மாற்றியுள்ளோம். மதத்தின் அடிப்படையில் பாஜக மக்களை பாகுபாடு காட்டுவதில்லை.
காங்கிரஸ் ஆட்சியின் போது நாகலாந்தில் அரசியல் ஸ்திரமின்மை இருந்தது. அக்கட்சி டெல்லியிலிருந்து வடகிழக்கு பகுதியை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தியது. வம்ச அரசியலுக்கு, டெல்லி முதல் திமாபூர் வரை முன்னுரிமை அளிக்கப்பட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) நாகாலாந்தை இயக்குவதற்கு அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகிய மூன்று மந்திரங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழலில் பாஜக பெரும் பள்ளத்தை அடைத்துள்ளது. இதன் விளைவாக டெல்லியில் இருந்து அனுப்பப்படும் பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.