இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளைத் தீர்மானிக்கும் தேர்தல் : அமித்ஷா தகவல்..

By 
amit67

எதிர்வரும் மக்களவைத் தேர்தல், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளைத் தீர்மானிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற இந்திய சர்வதேச அமைப்பின் ஆண்டு முதலீட்டு உச்சி மாநாட்டில் கலந்து பேசினார். அப்போது அவர், "இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் தேர்தல் நடக்க உள்ளது. ஒருவகையில், இது உலகம் முழுவதும் தேர்தல் ஆண்டு. உலகம் முழுவதும் இந்த ஆண்டு 40 தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த தேர்தல் திருவிழாவில் இந்தியாவும் பங்கேற்கும்.

மற்ற நாடுகளில், அவர்களின் அரசியலமைப்பின்படி தேர்தல்கள் 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் அல்லது 6 மாதங்களுக்கானதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் நடக்க உள்ள தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளை தீர்மானிக்கும்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா தன்னம்பிக்கை கொண்டதாகவும், தற்சார்பு கொண்டதாகவும் மாறி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மத்திய அரசு ஒரு செயலற்ற அரசாக இருந்தது. அந்த நிலையில் இருந்து அரசு செயல்திறன் கொண்டதாக மத்திய அரசை மோடி உருவாக்கி இருக்கிறார். பிற்போக்குத்தனத்தில் இருந்த ஒரு அரசை, முற்போக்கான வளர்ச்சியை கொண்ட அரசாக மாற்றி இருக்கிறார். பலவீனமான பொருளாதாரத்திலிருந்த நாட்டை, உயர் பொருளாதாரத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.

சோனியா - மன்மோகன் சிங் அரசாங்கம் 10 ஆண்டுகள் இருந்தது. அப்போது, அரசாங்கத்திற்கு 'கொள்கை முடக்கம்' இருப்பதாக சில கட்டுரையாளர்கள் கூறினர். அரசாங்கத்தை யார் வழிநடத்துகிறார்கள் என்றே தெரியாத நிலை இருந்தது. ஒவ்வொரு அமைச்சரும் தங்களைப் பிரதமராகக் கருதினார்கள். ஆனால், யாரும் பிரதமரை பிரதமராகக் கருதவில்லை. அப்படி ஒரு அரசாங்கம் இருந்தது. அந்த அரசு, அதன் 10 ஆண்டுகளில் எந்தக் கொள்கையையும் உருவாக்கவில்லை.

பிரதமர் மோடி தனது 10 ஆண்டுகால ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட கொள்கைகளை வகுத்துள்ளார். நமது நாட்டின் எதிர்காலத் திறனைக் கணிக்க ரேட்டிங் ஏஜென்சிகள் எவராலும் முடியாது என்று என்னால் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். அத்தகைய உறுதியான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம்.

எந்த ஒரு மதிப்பீட்டு நிறுவனமும் இவ்வளவு பெரிய அளவிலான மாற்றத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. அரசு, தலைவர், அரசாங்க கொள்கைகள் ஆகிய மூன்று காரணிகளின் அடிப்படையில் முதலீடுகள் வருகின்றன. இந்த மூன்று காரணிகளிலும் இந்தியா 100/100 பெறும்" என்று அமித் ஷா கூறினார்.

Share this story