விவசாயிகள் போராட்டத்திற்கு 'என்ட் கார்டு' : வரும் சனியுடன் பிரச்சினை முடிகிறது
 

By 
End card' for farmers' struggle The issue ends this coming Saturday

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

குறிப்பாக, டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி போன்ற எல்லையை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர தயாராக இருந்தது. 

ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என விவசாயிகள் கண்டிப்புடன் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

பிரதமர் அறிவிப்பு :

இதற்கிடையே செங்கோட்டை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தியபோது, வன்முறை வெடித்தது. என்றாலும் தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.

இதனால், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி கடந்த 29-ந்தேதி பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

என்றாலும், குறைந்த பட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) குறித்து உறுதியளிக்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவோம் எனத் தெரிவித்தனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் சங்கங்களுடன் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

சங்கத்தின் முடிவு :

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை (டிசம்பர் 11-ந்தேதி) டெல்லி சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேறுகிறார்கள்.

இன்று மாலை 5.30 மணிக்கு வெற்றி பிரார்த்தனைக்கு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

அதேபோல், சனிக்கிழமை சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் காலை 9 மணிக்கு வெற்றி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநில விவசாயிகள் 13-ந்தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அல்லது எஸ்.கே.எம். டிசம்பர் 15-ந்தேதி மேலும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
*

Share this story