பேசாமல் இருந்த இபிஎஸ்.. இப்போதாவது பேசுகிறாரே என்பது ஆறுதலாய் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

By 
kloo

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய  எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிலுரையை வழங்கினார். அப்போது பேசிய அவர்,

மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை, விரும்பவுமில்லை. மாநில முதலமைச்சர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தும் அவலத்தைப் பார்க்கிறோம்.

நாம் இரண்டு பெரிய இயற்கை பேரிடர்களைச் சந்தித்தோம். அதற்குக்கூட நிவாரணத் தொகை தரவில்லை. 30-06-2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களைத் தருவதில்லை. தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி, மோனோ ரயிலுக்குக் கொடி பிடித்தவர்கள் இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு உங்களது ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், அதனைச் செயல்படுத்துவதற்குத் நீங்கள் ஆட்சியில் இருந்தவரை முனைப்புக் காட்டவில்லை. எங்களது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், பணி ஆணைகள் வழங்கப்பட்டன; ஒப்பந்தங்கள் அனைத்துப் மேற்கொள்ளப்பட்டன; அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்டன. 

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம் மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கிறேன். ஆறு நாட்களுக்கு முன்பு கூட பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கான ஒன்றிய அரசின் நிதியை இதுவரை தராததால், இந்த முழுத்தொகையையும் மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனிலிருந்து மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

இதுநாள் வரையில் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இப்போதாவது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, எதிர்க்கட்சித் தலைவர் எங்களுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என தங்கள் வாயிலாகக் நான் கேட்டுக் கொள்கிறேன்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் முனைவர் ஜவாஹிருல்லா அவர்கள் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும் என ஒரு நீண்டகால கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.

சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், 

ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன்களை என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு பேராசிரியர் ஜவாஹிருல்லா  கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, ஆவன செய்யப்படும் என்பதையும் பேரவைத் தலைவர் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த பதிலுரையில் முக்கியமான ஒரு அறிவிப்பையும் இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2001-ஆம் ஆண்டிற்கு முன் பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட ஏறத்தாழ 2 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், புனரமைக்கவும் 2,000 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Share this story