அசாதாரண சாதனை.. அறிவியலின் புதிய எல்லை - விஞ்ஞானிகளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

By 
iis

சூரியனை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1, இன்று ஜனவரி 6ம் தேதி பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்1 என்ற அதன் புள்ளியை வெற்றிகரமாக அடைந்துள்ளது.

அறிவியல் உலகில் இது ஒரு அசாதாரண சாதனையாக பார்க்கப்படுகிறது, உலக நாடுகள் இந்திய விஞ்ஞானிகளுக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவது நாடாக இந்த அறிவியல் சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ட்விட்டரில் அறிவித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ஆதித்யா எல்1 விண்கலம் பேசுவது போல வருணனையாக "எனது சொந்த கிரகத்தில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள L1 (லெக்ராஞ்சியன் 1) புள்ளியை நான் வந்தடைந்துவிட்டேன். இவ்வளவு தொலைவில் இருப்பது உற்சாகமாக இருந்தாலும், சூரிய மர்மங்களை அவிழ்க்க தயாராக இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய விஞ்ஞானிகளின் இந்த மாபெரும் சாதனையை வியந்து பாராட்டியுள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "இந்தியா மற்றொரு அடையாளத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையம் ஆதித்யா-எல்1 இலக்கை அடைந்தது". 

மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடுவோம் என்று அவர் கூறியுள்ளார். 

பல்வேரு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இந்திய விஞ்ஞானிகளின் இந்த மகத்தான சாதனைக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சூரியன் குறித்த பல்வேறு விஷயங்களை இந்த ஆதித்யா ஆய்வுகளை மேற்கொள்ளும். அதற்கான இறுதி புள்ளியில் தான் இன்று ஜனவரி 6ம் தேதி அது சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story