தண்டவாளத்தில் மெய்மறந்து வீடியோ சூட் : 2 மாணவர்கள் பலி

பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் இருவரின் சடலங்கள் கிடப்பதாக ஷாஹ்தாரா காவல் நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை மாலை 4.35 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரண்டு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில், இறந்தவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்றும், இருவரும் ரெயில் தண்டவாளத்தில் வீடியோக்கள் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது (ரீல்ஸ்), ரெயில் மோதி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் காந்தி நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயதான வான்ஷ் சர்மா மற்றும் 20 வயதான மோனு ஆகியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதில், ஷர்மா பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். விற்பனையாளராக பணிபுரிந்து வந்த மோனு, டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலை கல்வியில் பி.ஏ படித்து வந்துள்ளார். தண்டவாளத்தில் நின்று மெய்மறந்து ரீல்ஸ் செய்துக் கொண்டிருந்தபோது இளைஞர்கள் மீது ரெயில் மோதி ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.