சினிமா இயக்குனரை தலைகீழாக கட்டி சித்ரவதை : உடன்பிறந்த தங்கை வெறிச்செயல்

atta

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 52). சினிமா துணை இயக்குனர். தங்கதுரையின் தங்கை அம்பிகா பல்லடம் சேடபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் வேலுச்சாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்தநிலையில் பூர்வீக சொத்தை தங்களுக்கு தருமாறு அம்பிகா குடும்பத்தினர் தங்கதுரையிடம் கேட்டு வந்தனர். இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் தன்னை கடத்தி சென்று சொத்து பத்திரங்களில் கையெழுத்து வாங்கியதுடன், மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டதாக தங்கதுரை பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து தங்கதுரை போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் சினிமாவில் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன். எனது பெற்றோர் இறந்து விட்டனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். 3 மாதத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இதனால் தனியே வசித்து வந்தேன்.

பல்லடத்தில் வசிக்கும் எனது தங்கை அம்பிகா மற்றும் அவரது கணவர் வேலுச்சாமி ஆகியோர் தொடர்ந்து எனது பெற்றோரின் சொத்துக்களை தங்களுக்கு எழுதித் தருமாறு கேட்டு வந்தனர். நான் மறுத்து வந்தேன். கடந்த 25-ந் தேதி, பல்லடம் சேடபாளையத்தை சேர்ந்த ஒருவர், தாராபுரம் பகுதியில் தோட்டம் விற்பனைக்கு உள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதனை பார்ப்பதற்கு என்னை பல்லடம் சேடபாளையம் வரச்சொன்னார்.

நான் அங்கு சென்றபோது, அங்கு ஏற்கனவே இருந்த எனது மைத்துனர் வேலுச்சாமி, அவரது மகன் கோகுலக்கண்ணன் மற்றும் சிலர் என்னை அடித்து கைகளை பின்புறமாக கட்டி, வாயில் துணி வைத்து அடைத்து பேச முடியாமல் செய்தனர். பின்னர் பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் உள்ள வேலுச்சாமிக்கு சொந்தமான வீட்டிற்கு கொண்டு சென்று அடைத்து வைத்து சொத்துக்களை எழுதி தரும்படி கேட்டு மீண்டும் அடித்து துன்புறுத்தினர். தலைகீழாக தொங்க விட்டு தாக்கினர்.

வலி தாங்க முடியாத நான் அவர்கள் சொன்ன 21 பத்திர பேப்பர்களில் கையெழுத்து போட்டேன். இதையடுத்து நான் அணிந்திருந்த 5 பவுன் தங்க பிரேஸ்லெட், 7 பவுன் தங்க சங்கிலி, 1 1/4 பவுன்மோதிரம் மற்றும் பணம் ரூ.1.60 லட்சம், என்னுடைய குடும்ப அட்டை, வங்கி, ஏடிஎம் கார்டு, பான் கார்டு மற்றும் என்னுடைய சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

பின்னர் எனக்கு வலுகட்டாயமாக மதுபானம் கொடுத்து மயக்கம் அடைய செய்தனர். மீண்டும் நான் எழுந்தபோது வலுக்கட்டாயமாக மதுபானம் குடிக்க செய்தனர். மது போதை தெளிந்த நிலையில் நான் பார்த்தபோது பெங்களூரில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்தேன். அங்கிருந்தவர்களிடம் தகவல் சொல்லி எனது வளர்ப்பு தாய் வசந்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் என்னை பெங்களூரில் வந்து மீட்டனர் . பின்னர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி எனது தங்கை குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளேன். இவ்வாறு மனுவில் தங்கதுரை கூறியுள்ளார்.

இதையடுத்து ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தலைமறைவாக இருந்த பல்லடம் சேடபாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி(57), அவரது மகன் கோகுலக்கண்ணன்(25) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட ரியாஸ் கான் (29), சாகுல் ஹமீது(35), அஷ்ரப் அலி(30) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அம்பிகாவை போலீசார் தேடி வருகின்றனர். கைதான கோகுல கண்ணன் பா.ஜ.க. நகர விவசாய அணி செயலாளராக உள்ளார். சொத்துக்காக உடன் பிறந்த அண்ணனும், சினிமா இயக்குனருமான தங்க துரையை தங்கை கடத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story