சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் : மத்தியக் குழுவினர் நேரில் பார்வை..

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வெள்ள சேதங்களை பார்வையிட 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்த மத்திய குழுவினர் நேற்று மதியம் 1 மணியளவில் சென்னை வந்தனர். பிற்பகல் 3.30 மணிக்கு தலைமைச் செயலகம் சென்றனர்.
அங்கு தலைமைச் செயலாளர் இறையன்பு, பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேத விவரங்களை விரிவாக எடுத்து கூறினார்கள்.
ஆணையர் விளக்கம் :
அதன் பிறகு, சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு (ரிப்பன் மாளிகை) மத்திய குழுவினர் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ள சேத பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.
மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை மத்திய குழுவினருக்கு விளக்கி கூறினார்.
இரண்டு பிரிவு :
இதைத் தொடர்ந்து, மத்திய குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சென்று, இன்றும் நாளையும் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிடுகின்றனர்.
உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான முதல் குழுவில் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அதிகாரி ராணஞ்சாய்சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலாளர் எம்.வி.என். வரபிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர், இன்று காலை சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். வடசென்னையில் வீரா செட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புரசைவாக்கம் அழகப்பா ரோடு, கொளத்தூர் சிவ இளங்கோ சாலை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்று விளக்கி கூறினார்கள்.
*