கட்டாய பாலியல் வன்கொடுமை : சிவசங்கர் பாபா மீது, சிபிசிஐடி விசாரணை தீவிரம்..

By 
Forced sexual harassment CBCID probe into Sivashankar Baba intensifies.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது, முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில், கைதான சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டப்பிரிவும் அவர் மீது பாய்ந்துள்ளது.

கட்டாய பாலியல் வன்கொடுமை :

3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், இருவர் சகோதரிகள் ஆவர். 

மாணவிகள் அளித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிவசங்கர் பாபா மீது செங்கல்பட்டு கோர்ட்டில் முதல் வழக்கில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிவசங்கர் பாபா கேளம்பாக்கம் பள்ளியில் படித்த மாணவிகளிடம் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கேட்டபோது, 3 வழக்குகளின் அடிப்படையில்,
நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் அவர் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தனர்.

போலீசார் தீவிரம் :

சிவசங்கர் பாபா மீது ஒரு வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த 2 வழக்குகளிலும், குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

சிவசங்கர் பாபா மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் செங்கல்பட்டு கோர்ட்டில் 2-வது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு, 3-வது வழக்கிலும் போலீசார் தனி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறார்கள்.

தள்ளுபடி :

இதன் மூலம், சிவசங்கர் பாபா எளிதில் ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, தாக்கல் செய்த 2 மனுக்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி ஆனது. 

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்று வருவதால், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story