இலவச மின்சாரம் ரத்தா.? வெளியாகும் தகவல் உண்மையா.? மின்சார வாரியம் விளக்கம்..

By 
100u

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, மின் தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மின்சார தேவை உச்சக்கட்டத்தை தொட்டது. மின் தேவை இந்த வருடம் 3 ஆயிரம் மெகாவாட்டிற்கு கூடுதலாக அதிகரித்து உள்ளது.

இதனால், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் மின்சார வாரியம் மிகப்பெரிய தொகையை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள, 2.34 கோடி வீடுகளுக்கும், மின் வாரியம் 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது.. இதன் காரணமாகவும் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

இதன் காரணமாக 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. குறிப்பாக சென்னையில் மின் வாரிய அதிகாரிகள் வீடுகள் தோறும் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ள தகவல் ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது,  அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுகிறது. அந்த உத்தரவில் வாடகை வீட்டுக்காரர்களுக்கான மானியத்தில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு வீட்டின் உரிமையாளர் அவரின் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும்.

ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்துள்ள வசதி படைத்தவர்களுக்கு தான் இதனால் பாதிப்பு ஏற்படும். ஏழை, நடுத்தர மக்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகத்திற்கு இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் ஆனால் 100 யூனிட் இலவசம் இல்லை என்று மொபைல் போன்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ் போலியானது எனவும் இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Share this story