இனி, மணிப்பூரில் வன்முறை இருக்காது! அமைதியை நிலைநாட்ட அமித் ஷாவுடன் உடன்படிக்கை..

By 
manipur9

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதில் அவர்கள் வன்முறையைக் விட்டுவிடுவதாக உறுதி அளித்துள்ளனர் என்று அமித் ஷா அறிவித்துள்ளார்.

இந்த நகர்வு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதில் ஒரு மைல்கல் என்று கூறியுள்ள அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையிலான அரசு வடகிழக்கு மாநிலத்தில் நிரந்தரமாக அமைதியை நிலைநாட்ட இடைவிடாத முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

"ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி இன்று டெல்லியில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மணிப்பூரின் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த பழமையான ஆயுதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) வன்முறையைத் துறந்து மைய நீரோட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஜனநாயக செயல்முறைகளுக்கு அவர்களை வரவேற்கிறேன்" என்று அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"ஐ.என்.எல்.எஃப். (UNLF) உடன் இந்திய அரசும் மணிப்பூர் அரசும் இன்று கையொப்பமிட்ட அமைதி ஒப்பந்தம் ஆறுபது ஆண்டுகாலமாக இயங்கிவந்த ஆயுத இயக்கத்தின் முடிவைக் குறிக்கிறது" என்றும் அவர் கூறினார்.

மேலும், "இது பிரதமர் மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பார்வையை உணர்த்தும் ஒரு முக்கிய சாதனையாகும். வடகிழக்கு இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது" என்றும் ட்விட்டரில் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் இராணுவம் (MPA), மணிப்பூரில் உள்ள மெய்தீ ஆயுதக் குழுக்களில் ஒன்றாகும். ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலத்தில் நடந்துவரும் வன்முறை காரணமாக, பல மெய்தீ ஆயுத அமைப்புகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தீ சமூகத்தினர் இடையே பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் 180 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசு சார்பில் ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறிய சில நாட்களில் உள்துறை அமைச்சரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53% சதவீதம் மெய்தீ சமூகத்தினர் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்கின்றனர். 40 சதவீதம் பேர்  நாகாக்கள் மற்றும் குக்கி பழங்குடியினங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர்.

Share this story