தடுப்பூசி போடும் பணிக்காக 2,286 நர்சுகள் நியமனம் : தமிழக அரசு
 

Government of Tamil Nadu appoints 2,286 nurses for vaccination

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இலக்கை அடைய இன்னும் 5 சதவீதம் பேர் முதல் தவணையும், 40 சதவீதம் பேர் 2-வது தவணையும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், தடுப்பூசி போடும் பணி கடந்த சில மாதங்களாக தீவிரப்படுத்தப்பட்டதால் அங்குள்ள நர்சுகள், கிராம செவிலியர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனால், மகப்பேறு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பிற மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அவர்களை அந்த பணியில் தொடர்ந்து ஈடுபடுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தற்காலிக நியமனம் :

தடுப்பூசி போடும் பணிக்காக மட்டும் தற்காலிகமாக நர்சுகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. 

2,286 ஆரம்ப சுகாதார நிலைங்களில் 2,286 தற்காலிக செவிலியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது :

தடுப்பூசி போடும் பணியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றக் கூடிய நர்சுகள், கிராம செவிலியர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டார்கள்.

இதனால், மற்ற மருத்துவ சேவை பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டதால், உடனடியாக தற்காலிக நர்சுகள் தொகுப்பூதியத்தில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊதியம் :

ஓய்வு பெற்ற நர்சுகள் மற்றும் கொரோனா பணியில் ஈடுபட்ட நர்சுகள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒருநாள் தொகுப்பூதியமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அவர்களுக்கு பணி செய்யக்கூடிய நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படும். 

இதன் மூலம், மகப்பேறு மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாது. தொடர்ந்து அந்த பணியை செய்யக்கூடிய நர்சுகள் அதில் ஈடுபடுவார்கள்' என்றார்.
*

Share this story